நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைப்பதிலும், கிராமப்புற வளர்ச்சியை முன்னெடுப்பதிலும் கூட்டுறவுத் துறை முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாட்டின் கூட்டுறவுத் துறையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கூட்டுறவு துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
11 மாநிலங்களின் 11 முதன்மை வேளாண்மைக் கடன் சங்கங்களில் (பிஏசிஎஸ்) செய்யப்படும் ‘கூட்டுறவுத் துறையில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டத்தை டெல்லியில் பிரதமர் இன்று தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் உள்ள 18,000 பிஏசிஎஸ்களில் கணினிமயமாக்கலுக்கான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த திட்டம் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்புத் திட்டம். இதன் மூலம் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஆயிரக்கணக்கான கிடங்குகள் உருவாக்கப்படும். PAC களின் கணினிமயமாக்கல் போன்ற பிற திட்டங்கள் விவசாயத்திற்கு புதிய பரிமாணங்களை கொடுக்கும். நாட்டில் விவசாயத்தை நவீனமயமாக்கும் என தெரிவித்தார்.
கூட்டுறவு என்பது இந்தியாவின் தொன்மையான கருத்து என்பதை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். ஒரு புனித நூலை மேற்கோள் காட்டி, சிறிய வளங்களை ஒன்றிணைத்தால் பெரிய பணியை நிறைவேற்ற முடியும் என்று விளக்கிய பிரதமர், இந்தியாவில் உள்ள பண்டைய கிராமங்களில் இந்த மாதிரி பின்பற்றப்பட்டது என்றும் கூறினார்.
குஜராத்தின் முதலமைச்சராக இருந்த தனது அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், அமுல் மற்றும் லிஜ்ஜத் பாபாட்டின் வெற்றிக் கதைகளை கூட்டுறவுகளின் சக்தியாகக் குறிப்பிட்டு, இந்த நிறுவனங்களில் பெண்களின் முக்கியப் பங்கையும் எடுத்துக்காட்டினார்.
கூட்டுறவுத் துறை தொடர்பான கொள்கைகளில் பெண்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. பல மாநில கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தை திருத்துவதன் மூலம் பெண்களுக்கான வாரியப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதைக் அவர் குறிப்பிட்டார்.
சேமிப்புக் கட்டமைப்பு இல்லாததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், உலகிலேயே மிகப்பெரிய சேமிப்புத் திட்டமான 700 லட்சம் மெட்ரிக் டன் அரசால் தொடங்கப்பட்டு அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.1.25 லட்சம் செலவில் முடிக்கப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சேமித்து வைப்பதற்கும், தங்களின் தேவைக்கேற்ப சரியான நேரத்தில் விற்பனை செய்வதற்கும் வங்கிகளில் கடன் பெறவும் இது உதவும் என்றார்.
கூட்டுறவு குழுக்கள் கிராமங்களில் பொதுவான சேவை மையங்களாகச் செயல்பட்டு நூற்றுக்கணக்கான வசதிகளை வழங்குகின்றன. மேலும் விவசாயிகளுக்கு சேவைகளை அதிக அளவில் எடுத்துச் செல்ல தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் இந்தியா தோன்றியதை பிரதமர் குறிப்பிட்டார். கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
விக்சித் பாரத் பயணத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் கோடிட்டுக் காட்டினார். ஆத்மநிர்பர் பாரதத்தின் இலக்குகளுக்கு பங்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். ஆத்மநிர்பர் பாரதம் இல்லாமல் விக்சித் பாரதம் சாத்தியமில்லை” என்று பிரதமர் வலியுறுத்தினார்.
நாம் இறக்குமதியை நம்பியிருக்கும் பொருட்களை கூட்டுறவு நிறுவனம் பட்டியலிட வேண்டும் என்றும், அவற்றை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கு கூட்டுறவுத் துறை எவ்வாறு உதவும் என்பதை ஆராய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். சமையல் எண்ணெய்யை அவர் உதாரணம் காட்டினார்.