மக்களவை தேர்தல் தேதி தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான தகவல் போலியானது என மத்திய தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
17-வது மக்களவையின் ஆயுட்காலம் ஜூன் 16ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்ப்பாட்டு பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முதல்கட்டமாக பீகார், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் ஆணைய குழு ஆய்வு கூட்டத்தை நடத்தியுள்ளது.
இந்நிலையில், மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. மேலும் வேட்பு மனு தாக்கல், வேட்பு மனு பரிசீலனை, வாக்கு எண்ணிக்கை குறித்த தேதியும் வெளியானது.
இந்த தகவல் போலியானது என தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுவரை தேதி எதுவும் அறிவிக்கப்படவில்லை. உரிய நேரத்தில் பத்திரிகைகளை அழைத்து தேதி அறிவிக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.