பாரத பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகாதீசர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று குஜராத் சென்றார். இன்று காலை 8.30 மணியளவில் ஒகா பெருநிலப் பகுதியையும், பெய்ட் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் சுமார் ரூ.980 கோடி செலவில் கட்டப்பட்ட கேபிள் பாலத்தை திறந்து வைத்தார்.
பாலம் திறப்பதற்கு முன்னதாக இன்று காலை பாரத பிரதமர் பெய்ட் துவாரகாவில் உள்ள கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 101 வது திவ்ய தேசமான இக்கோவிலுக்குள் சென்ற பிரதமர் அங்கிருந்த பக்தர்களும், கோவில் நிர்வாகிகளும் வரவேற்றனர். பின்னர் சுவாமிக்கு பூ மாலை அணிவித்து பூஜைகள் செய்தார்.
பின்னர் கோவில் நிர்வாகிகள் பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உருவச் சிலையை பரிசாக வழங்கினர். அங்கிருந்த உண்டியலில் காணிக்கை செலுத்திவிட்டு இறைவனிடம் ஆசி பெற்று பாலம் திறப்பு விழாவிற்கு சென்றார் பிரதமர் மோடி.
துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. பல படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். இக்கோவில் கோபுரத்தின் உயரம் 51.8 மீட்டர் ஆகும். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின் மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக காட்சியளிக்கும்.
72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் உள்ளது. கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.