பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் .
இன்றைய தினம், பாரதப் பிரதமர் மோடி.நாட்டு மக்களுடன் வானொலி மூலம் நேரடியாக உரையாடும் #MannKiBaat 110 ஆவது நிகழ்ச்சியில், வரும் மார்ச் 8 அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பெண்கள் முன்னேற்றம் குறித்தும், சமுதாயத்தில் பெண்களின் முக்கியப் பங்கு குறித்தும் பேசிய பிரதமர், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்ற மகாகவி பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசியது பெருமையளிக்கிறது.
மேலும், அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துள்ள பெண்கள், தற்போது விவசாயத்திலும் சிறந்து விளங்க, ஆளில்லா சிறு விமானங்களை வழங்கி, அவற்றின் மூலம், உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப் பயிற்சியும், உதவிகளும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் வழங்கும் திட்டம், இனி விவசாயத்திலும் பெண்களின் இன்றியமையாத பங்கினை வெளிப்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
மார்ச் 3 அன்று, உலக வனவிலங்குகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, வனவிலங்குகளைப் பாதுகாப்பதில் நமது நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும், மத்திய அரசின் முயற்சிகளால், இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும், வனவிலங்குகள் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறி, வனவியல் பாதுகாப்பில், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், முதன்முறை வாக்காளர்களான இளைஞர்களின் வாக்குகள், ஜனநாயகத்துக்கு எத்தனை முக்கியம் என்பதை விளக்கி, அனைவரையும் தேர்தல்களில் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. வரும் மே மாத இறுதியில், மீண்டும் நமது பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றுவதைக் கேட்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.