2024 மக்களவை தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தவறாமல் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் ( மன் கி பாத் ) எனும் வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்காக உரையாற்றி வருகிறார். பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மனதின் குரல் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து தனது 110வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்
சில நாட்கள் கழித்து மார்ச் மாதம் 8ஆம் தேதியன்று நாம் பெண்கள் தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இந்த விசேஷமான நாளானது, தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பெண்-சக்தியின் பங்களிப்பைப் போற்றும் சந்தர்ப்பத்தை நமக்கு அளிக்கிறது. பெண்களுக்கு சமமான சந்தர்ப்பம் வாய்க்கப்பெறும் போது மட்டுமே உலகம் தன்னிறைவு பெற்றதாக ஆகும் என்று மகாகவி பாரதியார் கூறியிருக்கிறார்.
இன்று பாரதத்தின் பெண்-சக்தி என்பது அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றத்தின் புதிய சிகரங்களைத் தொட்டு வருகிறது. நமது தேசத்திலே, கிராமங்களில் வசிக்கும் பெண்கள் எல்லாம் ட்ரோன்களை இயக்குவார்கள் என்று சில ஆண்டுகள் முன்பு வரை யாராவது கற்பனை செய்து பார்த்திருப்பார்களா!! ஆனால் இன்று இது சாத்தியமாகி இருக்கிறது என தெரிவித்தார்.
இயற்கை விவசாயம், நீர் சேகரிப்பு மற்றும் தூய்மைப்பணிகளில் பெண்களின் தலைமைப்பண்பு வெளிவந்துள்ளது. ரசாயனங்களால், நமது அன்னை பூமியானது அவதிப்பட்டது. வேதனையடைந்தது. ஆனால், நமது பூமியை காப்பதில் பெண்கள் சக்தி முக்கிய பங்கு வகித்தது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இயற்கை வேளாண்மையில் பெண்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் தண்ணீர் சேகரிப்பில் நமது சகோதரிகள் மற்றும் பெண்கள் முழுமுயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேசத்தில் மக்களவைத் தேர்தல்களுக்கான சூழல் நிலவுகிறது, கடந்த முறையைப் போன்றே, மார்ச் மாதத்தில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வரும் சாத்தியம் இருக்கிறது. மனதின் குரல் நிகழ்ச்சியின் கடந்த 110 பகுதிகளாக நாம் இதை அரசின் தாக்கத்திலிருந்து தள்ளி வைத்தே வந்திருக்கிறோம் என்பதே கூட மனதின் குரலின் மிகப்பெரிய வெற்றியாகும். மனதின் குரலில், தேசத்தின் சமூக சக்தி பற்றி பேசப்படுகிறது, தேசத்தின் சாதனைகள் விவாதிக்கப்படுகின்றன.
இது ஒரு வகையிலே மக்களின் மக்களுக்காக, மக்கள் வாயிலாக தயார் செய்யப்படும் நிகழ்ச்சியாகும். ஆனாலும் கூட அரசியல் கண்ணியத்தைப் பின்பற்றும் வகையில், மக்களவைத் தேர்தல் என்ற இப்போதைய காலகட்டத்தில், அடுத்த மூன்று மாதங்களுக்கு மனதின் குரலின் ஒலிபரப்பு நடைபெறாது. அடுத்த முறை நாம் உரையாடுவது மனதின் குரலின் 111ஆவது பகுதியாக இருக்கும். அடுத்த முறை மனதின் குரலின் தொடக்கம் 111 என்ற சுபமான எண்ணோடு கூடவே இருக்கும், இதை விட வேறு என்ன சிறப்பாக இருக்க முடியும்!
ஆனால் நண்பர்களே, நீங்கள் எனக்காக ஒரு வேலை செய்ய வேண்டும். மனதின் குரல் வேண்டுமானால் மூன்று மாதங்கள் வரை வராமல் போகலாம் ஆனால், தேசத்தின் சாதனைகள் நின்று போகப் போவதில்லை என்பதால், நீங்கள் மன் கீ பாத் ஹேஷ்டேக்(#) என்பதோடு கூட, சமூகத்தின் சாதனைகளை, தேசத்தின் சாதனைகளை, சமூக ஊடகத்தில் தரவேற்றிக் கொண்டே இருக்கவும். சில நாட்கள் முன்பு தான் ஒரு இளைஞர் நல்லதொரு ஆலோசனையை கூறியிருந்தார்.
அதாவது மனதின் குரலின் இதுவரையிலான பகுதிகளிலிருந்து சின்னச்சின்ன காணொளிகளை, யூ ட்யூப் ஷார்ட்டுகளாக பகிர வேண்டும் என்று கூறியிருந்தார். ஆகையால் மனதின் குரலின் நேயர்களிடம் நான் விடுக்கும் வேண்டுகோள், நீங்கள் இப்படிப்பட்ட குறும்படங்களை நன்கு பகிரவும்.
மக்களவைத்தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் தங்களது வாக்குகளை தவறாமல் செலுத்த வேண்டும். தங்களது கனவுகளை நனவாக்க இளைஞர்கள் வாக்குரிமைகளை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.