திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி கசாண்ட்ரா, அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடி அசத்தினார். பிரதமர் மோடி அண்ணாமலையாரின் பக்தி பாடலை ரசித்து கேட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.
முன்னதாக பல்லடம் வந்த பாரத பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. தொண்டர்களும், பொதுமக்களும் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொதுக்கூட்டம் முடிந்த பிறகு திருப்பூர் பல்லடத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியை ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பாடகி Cassandra Mae Spittmann
மற்றும் அவரது தாயார் சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடியின் முன் ‘அச்யுதம் கேசவம் ராம நாராயணம்’ எனும் பக்தி பாடலை பாடினார். அந்த பாடலை பிரதமர் மோடி அருகில் இருந்த கண்ணாடி மேஜையில் கைகளால் தாளமிட்டு ரசித்து கேட்டார். மேலும், அந்த பாடகி பிரதமரிடம் ஒரு தமிழ் பாடலையும் பாடி அசத்தினார்.
“புவனங்கள் ஆளும் அண்ணாமலையே” எனும் அண்ணாமலையாரின் பக்தி பாடலை பாடினார். இந்த பாடலை பிரதமர் மோடி கைகளை தட்டியவாறு ஆர்வத்துடன் கேட்டு ரசித்தார். இந்த காணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.