செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பொருட்கள் உற்பத்தியில் முக்கிய உதிரி பாகமாக செமி கண்டக்டர் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தின் போது உற்பத்தி பாதிக்கப்பட்டு செமிகண்டக்டருக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதனையடுத்து செமி கண்டக்டர்களின் உற்பத்தியை அதிகரிக்க 6 ஆண்டுகளில் 76 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகையாக வழங்க கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் முதல் குறைக்கடத்தி ஃபேப்ரிகேஷன் ஆலை உள்ளிட்ட திட்டங்களுக்காக ரூ.1.26 லட்சம் கோடி முதலீட்டுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், இந்திய செமிகண்டக்டர் மிஷனின் கீழ் 3 குறைக்கடத்தி அலகுகளுக்கு அமைச்சரவையின் ஒப்புதலுடன், தொழில்நுட்ப தன்னம்பிக்கையை நோக்கிய நமது உருமாறும் பயணத்தை மேலும் வலுப்படுத்துகிறோம். செமிகண்டக்டர் உற்பத்தியில் இந்தியா உலகளாவிய மையமாக உருவெடுப்பதையும் இது உறுதி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.