அண்மையில் நடைபெற்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியதன் மூலம் மாநிலங்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் உயர்ந்துள்ளது.
15 மாநிலங்களில், 56 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்தது. இதனையொட்டி அந்த இடங்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, மூன்று மாநிலங்களில் 15 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், 10 இடங்களை பாஜக கைப்பற்றியது.
இதன் வாயிலாக மாநிலங்களவையில் பாஜக,வின் பலம் 97 ஆகவும், தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம், 118 ஆகவும் உயர்ந்துள்ளது. மாநிலங்களவையில் பெரும்பான்மை பலம் 121.
மக்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணி பலம் பொருந்திய நிலையில் இருந்தாலும், மாநிலங்களவையில், அந்த கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், சில முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது பாஜக கூட்டணி மாநிலங்களவையில் அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.