சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே ‛ இண்டி’ கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் அரம்பாக் நகரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது பேசிய பிரதமர், சந்தேஷ்காலியில் பெண்கள் படும் துன்பத்தை விட, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிலரின் வாக்குகள் முக்கியமா என்று அம்மாநில மக்கள் கேட்கின்றனர் என்றார்.
இங்கு நடந்ததை பார்த்து சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்து இருக்கும். சந்தேஷ்காலி பெண்களை மம்தா ஏமாற்றிவிட்டார். அவருக்கு பெண்களை விட அரசியல் முக்கியமாகி விட்டது என தெரிவித்தார்
இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகள் மௌனமாக இருப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பாஜகவின் தொடர் போராட்டம் காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை மேற்கு வங்க காவல்துறை கைது செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சமரச அரசியலில் ஈடுபடுவதிலும், ஊழல்வாதிகளை காப்பதையுமே இண்டி கூட்டணி கட்சி தலைவர்கள் நோக்கமாக கொண்டு உள்ளனர். மாநிலத்தில் ஊழல் மற்றும் குற்றங்களை மம்தா அரசு ஆதரிக்கிறது. அவர்களை விடுவிக்க மம்தா போராட்டம் நடத்துகிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் வளர்ச்சியையும் அவர் விரும்பவில்லை. அரசு வேலை முதல் கால்நடை கடத்தல் என அனைத்திலும் திரிணமுல் காங்கிரஸ் ஊழல் செய்கிறது. இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இனியும் திரிணமுல் கொள்ளையடிக்க அனுமதிக்கலாமா?. அவர்களை விடமாட்டேன். திரிணமுல் காங்கிரசின் முதல் எதிரி நான் தான். அக்கட்சியின் ஊழலுக்கு முடிவு கட்டப்படும் என தெரிவித்தார்.
ஷாஜஹான் தப்பி ஓடிய இரண்டு மாதங்களாக யாரோ ஒருவர் அவரைக் காப்பாற்ற முயற்சித்திருக்க வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடி, ஒவ்வொரு காயத்திற்கும் தங்கள் வாக்கு மூலம் பதிலளிக்குமாறு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.