கேரள கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக அந்த பல்கலைக்கழக துணைவேந்தரை அம்மாநில ஆளுநர் ஆரிப் முகம்மது கான் இடைநீக்கம் செய்துள்ளார்.
வயநாட்டில் உள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு மாணவர் ஜே.எஸ். சித்தார்த், பிப்ரவரி 18ஆம் தேதி கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் ரேகிங் செய்து கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. மகனின் உடலில் காயம் இருந்ததாகவும், அவர் அடித்து கொல்லப்பட்டிருக்கலாம் என மாணவரின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் ஆளும் சிபிஐ(எம்)-ன் மாணவர் பிரிவான இந்திய மாணவர் கூட்டமைப்பை (எஸ்எஃப்ஐ) சேர்ந்தவர் என்றும், அந்தக் கட்சி அவர்களைப் பாதுகாத்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த வழக்கில் முக்கிய நபரான சிஞ்சோ ஜான்சன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்துள்ள போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் 8 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த கேரள மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பல்கலைக்கழக துணைவேந்தரான சசீந்திரநாத்தை இடை நீக்கம் செய்து அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.