நாட்டின் தேசிய பாதுகாப்பு சூழல் கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு சூழல் கடந்த ஒரு தசாப்தத்தில் குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறியுள்ளது. வடகிழக்கு மற்றும் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் உள்பட அனைத்து வன்முறை களங்களும் இன்று இயல்பு நிலைக்கு வெகு அருகே உள்ளன.
ஆறரை தசாப்தங்களுக்கும் மேலாக முந்தைய அரசுகளின் தவறான கொள்கைகள், பல நூற்றாண்டுகளாக அமைதியாகவும் நல்லிணக்கத்துடனும் வாழும் சமூகங்களுக்கு இடையே பரஸ்பர அவநம்பிக்கையை ஏற்படுத்தின. சமூகப் பிளவுகள் பெருகின. சமூகங்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு பல ஆயிரம் விலைமதிப்பற்ற உயிர்களை பறிகொடுத்தன என அவர் தெரிவித்தார்.
அந்தக் கொள்கைகள் காலனித்துவ மரபுகளாக இருந்தன. பிரதமர் மோடி தேசிய பாதுகாப்புக் கொள்கைகளை காலனித்துவமற்றதாக்கியதால் வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத உணர்ச்சிபூர்வ மற்றும் குறிப்பிடத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அனுபவித்து வருவதாக அவர் கூறினார்.
இன்று அப்பகுதி இளைஞர்கள் ஆர்வமுள்ளவர்களாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் உள்ளனர். உள்கட்டமைப்புகளான சாலை, ரயில், விமான நிலையங்கள் மற்றும் டிஜிட்டல் துறை மேம்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அந்த பிராந்தியம் சுற்றுலாவுக்கான ஒரு விருப்பமான தலமாகி உள்ளது. பாரதத்தின் பிற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் நமது மகத்தான நாட்டின் இந்த அழகான பகுதியை பார்வையிட்டு வாய்ப்புகளை ஆராய வேண்டும். பார்வையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த மாற்றத்தை கவனிக்க வேண்டிய நேரம் இது என ஆளுநர் ரவி கூறினார்.