நாம் தமிழர் கட்சிக்கு சின்னம் கிடைக்காமல்போன விவகாரத்தில், சீமானுக்கு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 2013-ம் ஆண்டு போதை மருந்து கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் ஜாபர் சாதிக். அன்று பிடிபட்டது வெறும் 20 கிலோ மட்டுமே. ஆனால், இந்த 11 ஆண்டுகளில் ரூ.2,000 கோடிக்கு 3,500 கிலோ போதை மருந்து கடத்தும் இன்டர்நேஷனல் கிரிமினலாக ஜாபர் சாதிக் விஸ்வரூபம் எடுத்துள்ளார்.
வெளியில் வந்தவ ஜாபர் சாதிக்கை காவல்துறை முறையாகக் கண்காணிக்கவில்லை. மாறாக டிஜிபியிடம் அவார்டு வாங்கும் அளவுக்கும், முதல்வர், உதயநிதி ஆகியோருடன் புகைப்படம் எடுக்கும் அளவுக்கும் ஜாபர் சாதிக் வளர்ந்துள்ளார். சினிமா துறையில் கோலோச்சும் அளவு உயர்ந்துள்ளார். இதனால்தான், தமிழக அரசு செயல்படாத அரசு என சொல்லுகிறோம்.
சீமான் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால், அவர் கேட்ட சின்னம் கிடைக்கும். சின்னமே அவருக்காகக் காத்திருக்கும். ஆனால், அவரது கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியே அல்ல. சீமானுக்கு சின்னம் வேண்டும் என்றால் அவர்தான் முறையாக விண்ணப்பித்து பெறவேண்டும்.
தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை, யார் முதலில் வருகிறார்கலோ அவர்களுக்குத்தான் சின்னம் வழங்குவது வழக்கம். இதைத்தான் டெல்லி உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்றால் என்ன தகுதி வேண்டும் என சீமானுக்கு யாராவது சொன்னால் பரவாயில்லை. இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் சீமான் என் மீது தேவையில்லாமல் பழிபோடுகிறார். உண்மை எது, பொய் எது எனத் தெரிந்து கொண்டு இனி வரும் காலத்திலாவது அவர் உண்மையைப் பேசவேண்டும் என்றார்.