உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கிய பாஜக தலைமைக்கு நடிகை ஹேமமாலினி நன்றி தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மக்களவை தொகுதியில் போட்டியிட நடிகை ஹேமமாலினிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஹேமமாலினி, தன் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பு அளித்த பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜேபி நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு நன்றி தெரிவத்துக்கொண்டார். மதுரா தொகுதியின் வளர்ச்சிக்கு ஏற்கனவே பல நல்ல திட்டங்களை செய்துள்ளதாகவும், இன்னும் ஏராளமான திட்டங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
1999 ஆம் ஆண்டு, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், முன்னாள் பாலிவுட் நடிகரான வினோத் கன்னாவுக்காக மாலினி பிரச்சாரம் செய்தார். பிப்ரவரி 2004 இல், மாலினி அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேர்ந்தார்.
2003 முதல் 2009 வரை மேல்சபை உறுப்பினராக பதவி வகித்தார். 2014ஆம் மதுரா தொகுதியில் போட்டியிட்ட அவர், ஜெயந்த் சௌத்ரியை (RLD) வீழ்த்தினார். 2019ஆம் ஆண்டு அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.