பாஜக தலைவர்கள் தங்களது எக்ஸ் தளத்தில் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்து, தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இதன் மூலம் பாஜக தலைவர்கள் லாலு பிரசாத் யாதவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளனர்.
மக்களவை தேர்தலுக்கான தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் மீண்டும் 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க பாஜக தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதற்காக பாஜகவினர் மக்களை சந்தித்து, மத்திய அரசின் சாதனைகளை வீடு வீடாக சொல்லி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் பாஜக, 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி பிரதமர் மோடி மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பாஜக தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். அவர்கள் தங்களது பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் (Modi Ka Parivar) என்ற பெயரை சேர்த்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள், தங்களது எக்ஸ் பதிவில் தங்கள் பெயருக்கு பின்னால் மோடியின் குடும்பம் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.
இது குறித்து அரசியல் விமர்சகர்கள், மக்களவை தேர்தலுக்கான பரப்புரையை பாஜக தலைவர்கள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.