அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் சட்டமன்றக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங் (Lombo Tayeng), காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்துள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் பெமா காண்டு, பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை செய்து வருகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு தொடர்ந்து, பணியாற்றி வருகிறார்.
இதன் காரணமாக, மாற்று கட்சியினர் பலர், அம்மாநில பாஜக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 2 பேர் பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக இருந்த லம்போ தாயெங் (Lombo Tayeng), காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜக-வில் இணைந்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 60 தொகுதிகளில், காங்கிரஸ் கட்சி வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் 4 எம்எல்ஏ-க்களில் 3 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்ததால், தற்போது முன்னாள் முதலமைச்சர் நபம் துகி மட்டுமே காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.