தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் நடைபெற்ற விழாவில், ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய பிரதமர், மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு மத்திய அரசு செயல்படுவதாக கூறினார். வளர்ந்த இந்தியாவுக்கு நவீன உள்கட்டமைப்புகள் இருப்பது அவசியம்.
எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்காக ரூ.11 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இதன் மூலம் தெலுங்கானா அதிகபட்ச பலனைப் பெற வேண்டும் என மத்திய அரசு விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த 10 ஆண்டுகளாக, தெலுங்கானாவை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பிஆர்எஸ் மற்றும் காங்கிரஸுக்கு தெலுங்கானா வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வை இல்லை என்றும், மாநில மக்களுக்கு விடாமுயற்சியுடன் சேவை செய்வதில் பாஜக உறுதியாக உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
எதிர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் கருப்புப் பணத்தை மறைக்க இந்தியாவுக்கு வெளியே வங்கிக் கணக்குகளைத் திறக்கிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் ஜன்தன் கணக்குகளைத் திறக்கவும் அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்யவும் நான் உதவுகிறேன்.
அவர்கள் ஆடம்பர வீடுகளில் வசிக்கிறார்கள், அதே நேரத்தில் ஏழைகள் பக்கா வீடுகளில் தூங்குவதை நான் உறுதிசெய்கிறேன். அவர்களின் குழந்தைகளை உயர்த்துவதற்காக இந்தியாவின் வளங்களை விற்பனை செய்கின்றனர். அதே நேரத்தில் உங்கள் குழந்தைகளின் கனவுகளை நனவாக்க நான் பாடுபடுகிறேன். 140 கோடி இந்தியர்கள் எனது குடும்பம் என்றும் மோடி தெரிவித்தார்.
அடிலாபாத்தில் 56,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கி வைத்ததை நினைவுகூர்ந்த பிரதமர், சங்கரெட்டி நகரில் சுமார் 7,200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன என்றார்.
இந்தத் திட்டங்கள் சாலை, ரயில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற பல முக்கிய துறைகளுடன் தொடர்புடையவை என்றும் மோடி தெரிவித்தார்.