2014ஆம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள், தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே கவனம் செலுத்தியாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில், 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பேசிய பிரதமர் மோடி, இவ்வளவு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவது கிழக்கின் மனநிலையை காட்டுகிறது. ஒடிசாவின் தீர்மானம் இன்று மிகவும் தெளிவாக உள்ளது. இந்த தீர்மானம் பாஜக 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்பதை எடுத்து காட்டுகிறது.
காங்கிரஸ் அரசிடம் ஏழைகள் உதவி கேட்டபோது அந்த அரசு உத்தரவாதம் கேட்டது. 2014க்குப் பிறகு ஏழையின் மகன் ஆட்சிக்கு வந்து பிரதமரானார். ஏழைகளுக்கு பிரதமர் மோடி உத்திரவாதமாக மாறுவார் என்றும் அவர் கூறினார்.
இன்று நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் 2014க்கு முந்தைய ஆண்டுகளில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் முழு கவனமும் தங்கள் கஜானாவை நிரப்புவதில் மட்டுமே இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், பாஜக தலைமையிலான மத்திய அரசு, ஒடிசாவில் பெரும் முதலீடுகளைச் செய்துள்ளது. ஒடிசா விக்சித் பாரதத்தின் நுழைவாயிலாக மாற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்றும் பிரதமர் மோடி கூறினார்
ஒரு காலத்தில் ஏழைகளின் கனவாக இருந்த நிரந்தர வீடு, குடிநீர் மற்றும் எரிவாயு இணைப்பு தற்போது நனவாகி வருகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.