நாட்டின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவையை கொல்கத்தாவில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து பயணம் செய்தார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஹவுரா மைதான் – எஸ்பிளானேட் மெட்ரோ வழித்தடத்தில் நாட்டிலேயே முதல் முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களை இது இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் 6 ரயில் நிலையங்கள் உள்ளன. அதில் 3 நிலையங்கள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹூக்ளி நதிக்கு 32 மீட்டர் ஆழத்திலும், சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு நதியின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த பாதையை 45 விநாடிகளில் ரயில்கள் கடக்கும். இதனை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.
முதல் மெட்ரோ ரயிலில் பள்ளி மாணவ, மாணவிகள் தேசியக்கொடியை ஏந்தியவாறு மகிழ்ச்சி மற்றும் ஆராவாரத்துடன் பயணம் செய்தனர். அவர்களுடன் பிரதமர் மோடி அமர்ந்து சிரித்துப் பேசியவாறு பயணம் செய்தார்.
மேலும் அவர்களுக்கு சில அறிவுரைகளையும் அவர் வழங்கினார். முன்னதாக மெட்ரோ ரயில் நிலையத்தை திறக்க சென்ற பிரதமர் மோடியை அங்கு திரண்டிருந்தவர்கள் கைகளை உயர்த்தியும், உற்சாக குரல் எழுப்பியும் வரவேற்றனர்.
இந்த மெட்ரோ ரயில் சேவை, சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், தடையற்ற, எளிதான போக்குவரத்து சேவையை வழங்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.