மாடல் அழகி தன்யா சிங் தற்கொலை தொடர்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் சூரத் போலீசார் விசாரணை நடத்தினர்.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் மாடல் அழகி தன்யா சிங். சூரத்தில் உள்ள அவரது வீட்டில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி தூக்கிட்ட நிலையில் அவரது உடல் மீட்கப்பட்டது.
அவரது மரணத்திற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர் அபிஷேக் சர்மா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
அபிஷேக் சர்மா மற்றும் தன்யா சிங் இருவரும் நணபர்களாக இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். ஏனெனில் மாடல் அழகி தன்யா சிங் உயிரிழப்பதற்கு முன்பாக அபிஷேக் சர்மாவுக்கு வாட்ஸ்அப் மூலம் நிறைய குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஆனால் அவர் பதில் ஏதும் அனுப்பவில்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டது.
இந்நிலையில் சூரத் போலீசார் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மாவிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் சர்மாவும், தன்யா சிங்கும் கிட்டத்தட்ட ஒரு வருடமாக உறவில் இருந்ததாக காவல்துறையின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறினர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக சர்மா, தன்யா பேசவில்லை என்றும் கூறினர்.
மேலும் சர்மாவிடம் போலீஸார் விரிவாக விசாரணை நடத்தியதாகவும், அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாகவும் போலீசார் கூறினர். தேவைப்பட்டால் விசாரணைக்கு சர்மா மீண்டும் அழைக்கப்படுவார் என்றும் கூறினர்.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எஸ்.ஆர்.எச் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மா அந்த அணிக்காக 426 ரன்களை எடுத்தார். இவர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரில் 11 போட்டிகளில் 226 ரன்கள் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.