சிவராத்திரி மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக, தமிழகம் முழுவதும் ஆயிரத்து 360 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.
சிவராத்திரி மற்றும் முகூர்த்தம் வருகிற 8-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருவதாலும், 9 மற்றும் 10-ஆம் தேதிகள் (சனி, ஞாயிறு) வார விடுமுறை தினங்கள் என்பதாலும், சென்னையில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் பயணம் மேற்கொள்வர்.
இதனைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், தினந்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு, மார்ச் 7-ஆம் தேதி 270 பேருந்துகளும், 8-ஆம் தேதி 390 பேருந்துகளும், 9-ஆம் தேதி 430 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.
மேலும், சென்னை கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 8 மற்றும் 9-ஆம் தேதிகளில், 70 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதே போன்று, பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 1,360 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.