பெங்களூரூ ஹோட்டல் குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் குறித்து தகவல் அளித்தால் ரு. 10 லட்சம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரூ ஒயிட்பீல்டு அருகே ராமேஸ்வரம் கபே ஹோட்டல் செயல்பட்டு வருகிறது.இந்த ஹோட்டலில் மார்ச் ஒன்றாம் தேதி பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரு குண்டுகள் வெடித்தன. இதில் அங்கு உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்த 10 பேர் காயம் அடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது.
இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் என்ஐஏ அதிகாரிகள், குண்டுவெடிப்பில் தொடர்புடைய முக்கிய நபர் குறித்த தகவல் அளித்தால் ரு. 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய நபர் தொப்பி, முகமூடி மற்றும் கண்ணாடி அணிந்து ஓட்டலில் நுழையும் புகைப்படத்தை என்ஐஏ அதன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.