செல்போன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்தை இந்தியா அடைந்துள்ளது.
இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக திகழ்கிறது. இதுதொடர்பாக இந்திய செல்லுலார் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2014ஆம் ஆண்டில் 78 சதவீத இறக்குமதியை இந்த துறை சார்ந்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது செல்போன் உற்பத்தி துறை 97 சதவீத தன்னிறைவுக்கு மாறியுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் விற்கப்படும் மொத்த மொபைல் போன்களில் மூன்று சதவீதம் மட்டுமே தற்போது இறக்குமதி செய்யப்படுவதாகவும், கடந்த பத்தாண்டுகளில் இந்திய மொபைல் போன் துறையின் உற்பத்தி ரூ. 20 லட்சம் கோடியை நெருங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் 2.5 பில்லியன் யூனிட் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், 2.45 பில்லியன் யூனிட் மொபைல் போன்களை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.