வரும் ஆண்டுகளில் ட்ரோன் தொழில்நுட்பம் மேலும் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி பூசாவில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் வலிமையான பெண்கள் – வளர்ச்சியடைந்த பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி நமோ ட்ரோன் சகோதரிகளின் விவசாய ட்ரோன் செயல் விளக்கங்களை பார்வையிட்டார்.
நாடு முழுவதும் 11 வெவ்வேறு இடங்களைச் சேர்ந்த நமோ ட்ரோன் சகோதரிகள் ஒரே நேரத்தில் ட்ரோன் செயல் விளக்கத்தில் பங்கேற்றனர். அப்போது, 1,000 சகோதரிகளுக்கு ஆளில்லா ட்ரோன்களையும் பிரதமர் வழங்கினார். இதனைத்தொடர்ந்து அவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.
பின்னர் விழாவில் பேசிய பிரதமர், மேம்பட்ட இணைப்பு காரணமாக, இன்று, நாட்டின் தொலைதூரத்தில் உள்ள பெண்கள், பெரிய நகரங்களில் தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடிகிறது. ஒரு காலத்தில் தங்கள் ஆசைகள் கட்டுக்குள் வைக்கப்பட்டு, வீட்டு வேலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட பெண்கள், தற்போது முன் வந்து தேசத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்கின்றனர் என்றார்.
எங்கள் மூன்றாவது பதவிக்காலத்தில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுவோம் என பிரதமர் உறுதியளித்தார். நாரி சக்தி’யை செயல்படுத்துவதற்கும், பெண்கள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசினார்.
பால் மற்றும் காய்கறி பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வது மற்றும் மருந்து விநியோகம் போன்ற துறைகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவது பற்றி விரிவாகக் கூறினார்.
21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தொழில்நுட்ப புரட்சியை ‘நாரி சக்தி’ வழிநடத்தும் என்று நான் நம்புகிறேன். இன்று, ஐடி, விண்வெளி மற்றும் அறிவியல் துறைகளில் இந்தியப் பெண்கள் பெயர் பெறுவதை பார்க்கிறோம்.
வணிக பெண் விமானிகளின் எண்ணிக்கையில், உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. விண்ணில் பறக்கும் விமானமாக இருந்தாலும் சரி, விவசாயத்துக்கான ஆளில்லா விமானமாக இருந்தாலும் சரி, இந்திய பெண்கள் பின் தங்கவில்லை. சுய-உதவி குழுவில் (SHG) ஈடுபட்டுள்ள பெண்களின் கடின உழைப்பு தேசத்தை கட்டியெழுப்புவதில் முக்கிய குழுவாக மாற்றியுள்ளது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது பற்றி நான் பேசும்போதெல்லாம், காங்கிரஸ் போன்ற கட்சிகள் என்னை கேலி செய்தன. ஆனால் மோடியின் திட்டங்கள் அனுபவத்தால் உருவாக்கப்பட்டவை என்றும் அவர் கூறினார்.
வரும் ஆண்டுகளில், நாட்டில் ட்ரோன் தொழில்நுட்பம் விரிவடைய உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் சுய உதவிக் குழுக்கள் விரிவடைந்துள்ளன. இந்தியாவில் சுய உதவிக்குழுக்கள் பெண்கள் அதிகாரமளிக்கும் துறையில் புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.