பாராளுமன்ற தேர்தலையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தனது 2 -வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.
விரைவில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட மாநிலக் கட்சிகளும் களம் இறங்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், பா.ஜ.க சார்பில் ஏற்கனவே, முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர், சுதாரித்துக் கொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சி 39 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தனது 2 -வது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. புது டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் 43 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
இதில், காங்கிரஸ் எம்.பி கெளரவ் கோகோய் அஸ்ஸாம் மாநிலத்தின் ஜோர்ஹாட் தொகுதியிலும், நகுல் நாத் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா தொகுதியிலும், ராகுல் கஸ்வா ராஜஸ்தானின் சுரு தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேட்பாளர் பட்டியலில், பட்டியலினப் பிரிவில் 19 பேருக்கும், பழங்குடியினப் பிரிவில் 9 பேருக்கும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 13 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அசாம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 43 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.