குஜராத் மற்றும் அசாமில் சுமார் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமிகண்டக்டர் ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.
கடந்த மாதம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியாவில் குறைக்கடத்திகள் மற்றும் காட்சி உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்புகளின் வளர்ச்சியின் கீழ் மேலும் மூன்று குறைக்கடத்தி அலகுகளை நிறுவ ஒப்புதல் அளித்தது.
இதில் இரு அலகுகள் குஜராத்திலும் ஒரு அலகு அசாமிலும் அமைக்கப்படுகிறது. இந்த மூன்று ஆலைகளில் இரண்டை டாடா குழுமம் அமைக்கிறது.இந்தியாவில் குறைக்கடத்தி தொழில் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. பல்வேறு உள்ளூர் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அதன் பரந்த திறனைப் பயன்படுத்த விரும்புகின்றன.
டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (“TEPL”) தைவானின் பவர்சிப் செமிகண்டக்டர் கார்ப்பரேசன் (PSMC) உடன் இணைந்து 91,000 கோடி ரூபாய் முதலீட்டில் குஜராத்தின் தோலேராவில் குறைக்கடத்தி ஆலையை அமைக்கிறது.
சிஜி பவர், ஜப்பானின் ரெனேசஸ் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் தாய்லாந்தின் ஸ்டார்ஸ் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து குஜராத்தின் சனந்தில் குறைக்கடத்தி அலகு ஒன்றை அமைக்கிறது.
இதேபோல் அசாமில் ஒரு செமிகண்டக்டர் அலகை டாடா எலக்ட்ரானிக்ஸ் அமைக்கிறது. இந்த ஆலைகளுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார். இந்த அலகுகள் 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், சுமார் 60 ஆயிரம் மறைமுக வேலைகளையும் உருவாக்கும்.