அடிக்கல் நாட்டிய பின் திட்டங்களை முடிப்பதே பிரதமர் நரேந்திர மோடியின் வளர்ச்சி மாதிரியின் அடையாளம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
அசாம் மாநிலம் கவுகாத்தி ஐஐடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஏழு மாணவர்களுக்கு, சந்திரயான் 3 மாதிரியை வழங்கினார்.
அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் குறித்த நேரத்திற்குள் முடிக்கப்படவில்லை. அதனால் நாட்டின் நற்பெயர் பாதிக்கப்பட்டது. இந்தியா தனது திட்டங்களை முடிக்கவில்லை என்ற தோற்றத்தை அளித்தது என தெரிவித்தார்.
ஆனால் பிரதமர் மோடி பதவியேற்றதும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் குறித்து காலத்திற்குள் முடிக்கப்படுகிறது. இது மோடி வளர்ச்சி மாதிரியின் அடையாளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆட்சியால் வடகிழக்கு மாநிலங்கள் எண்ணற்ற பலன்களை பெற்றுள்ளன.முந்தைய ஆட்சியில் பிரதமரும், அமைச்சர்களும் எத்தனை முறை அங்கு விஜயம் செய்துள்ளனர் என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆனால் பிரதமர் மோடி 65 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு விஜயம் செய்துள்ளார். மத்திய அமைச்சர்கள் 850 முறை விஜயம் செய்துள்ளனர். இது பிராந்திய வளர்ச்சியில் மத்திய அரசாங்கத்தின் பங்களிப்பை காட்டுவதாக அவர் கூறினார். கடந்த தசாப்தத்தில் வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு மததிய பாஜக அரசு எடுத்த பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்துரைத்தார்.