எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட அதிநவீன MQ9B பிரிடேட்டர் ட்ரோன்களை, இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்கா ‘MQ9B பிரிடேட்டர்’ என்ற அதிநவீன ட்ரோன்களைத் தயாரித்து வருகிறது. இந்த வகை ட்ரோன்களை வானில் அதிக உயரத்தில் இயக்கி கண்காணிப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.
எதிரிகளின் இலக்குகளை மிக துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ட்ரோன்களை அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் மட்டுமே வைத்துள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ட்ரோன்களை அமெரிக்காவிடம் இருந்து வாங்குவதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் போட்டி போடுகின்றன.
இந்நிலையில், MQ9B பிரிடேட்டர் ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
இந்த ட்ரோன்கள் இந்திய கடற்படை மற்றும் இராணுவத்தில் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும், இவை கிழக்கு லடாக்கில் தொடரும் ராணுவ மோதலுக்கு மத்தியில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு வழியாக சீன ராணுவ நடவடிக்கைகளைக் கண்காணிக்க, உதவும் என்று கூறப்படுகிறது.