மறைந்த தா.பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்க மதுரை உயர் நீதிமன்றம் கிளை தடை விதித்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளராகப் பதவி வகித்தவர் தா.பாண்டியன். அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டது.
இதன் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் பிப்ரவரி 26-ம் தேதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், உசிலம்பட்டி அடுத்த உத்தப்பநாயக்கனூரில் உள்ள விவசாய இடத்தில், தா.பாண்டியனுக்கு மணி மண்டபம் கட்ட அக்கட்சியினர் முடிவு செய்தனர்.
இதற்காக, உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்பநாய்க்கனூரில் உள்ள அவரது பூர்வ இடத்தில் மணி மண்டபம் கட்ட முடிவு செய்து, கொடி நாட்டினர். ஆனால், இந்த நிலம் தொடர்பான சிவில் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், இதற்கு, தா.பாண்டியனின் உறவினரான பிரேம் சந்தர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விவசாய நிலத்தில், தா.பாண்டியனுக்கு மணி மண்டபம் அமைக்கத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.