நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
17-வது நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் 16-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கு முன்பாக, தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். எனவே, 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான முன்னேற்பாடுகளை கடந்த ஆண்டு முதலே இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது.
இந்த நிலையில், 18-வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், வாக்குச் சாவடிகளில் சாய்வு தளங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்றார்.
40 சதவீத மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் வீட்டில் இருந்தே வாக்களிக்கலாம். மேலும், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க போக்குவரத்து வசதி செய்து தரப்படும். சுமார் 88.4 லட்சம் மாற்றுத்திறனாளிகள் (PwDs) வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.