பிரதமர் மோடி தலைமையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 4 கிலோ மீட்டருக்கு பேரணி நடத்த கோவை பாஜக திட்டமிட்டது.
ஆனால், இந்த பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது. காரணம், மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மற்றும் பிரதமர் மோடியின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களால் ரோடு ஷோவுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கோவை காவல் துறை தெரிவித்தது.
கோவை காவல்துறையின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவை பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ் குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து, பிரதமர் மோடியின் சிறப்பு குழு பார்த்துக் கொள்ளும் எனவே, கோவை காவல்துறை பேரணிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் முழுவதும் மத்திய பாதுகாப்பு குழுவினர் மற்றும் மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி மற்றும் ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் வரை 3 கி.மீ. தூரத்திற்கு தீவிர பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளை அதாவது 18-ம் தேதி மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவை வருகிறார். கோவை வரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாஜகவினர் தயாராக உள்ளனர்.
கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து மாலை 5.45-க்கு மணிக்கு வாகனப் பேரணி துவங்குகிறது. சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் இந்த பேரணி, ஆர்.எஸ்.புரம் தபால் நிலையம் அருகே முடிவடைகிறது.
நாளை இரவு கோவை சர்க்யூட் ஹவுஸ்-ல் தங்கும் பிரதமர் மோடி செவ்வாய்கிழமை காலை கேரளா செல்கிறார்.