சேலத்தில் இன்று நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஓரிரு தினங்களாக ஆந்திரா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வந்த பிரதமர் மோடி நேற்று கோவையில் நடைபெற்ற பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றார். அப்போது சாலையின் இருபுறமும் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் கையசைத்தும், மலர்களை தூவியும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேற்று கோவையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று பாலக்காட்டில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்கிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சேலம் செல்கிறார். ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
பின்னர் சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக சார்பில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொள்கிறார்.
இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.