புதுக்கோட்டையில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை முதல் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில், அமைச்சராக இருந்தவர் சி.விஜயபாஸ்கர். இவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தபோது, இவர் மீது பல்வேறு ஊழல் புகார்கள் எழுந்தன. இவர், விராலிமலை தொகுதியில் வெற்றி பெற்று, தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
ஏற்கனவே, சி.விஜயபாஸ்கர் மீது குட்கா முறைகேடு, இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்தது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் உள்ளது. இதன் காரணமாக, அவருடைய வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, தமிழக ஊழல் தடுப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், புதுக்கோட்டையில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ஏற்கனவே, வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், அவர்கள் அளித்த தகவலின்படி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.