நாடாளுமன்ற தேர்தல் ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தென்கொரியாவின் சியோல் நகரில் ஜனநாயகத்திற்கான 3-வது உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிரதமர் மோடி காணொலி காட்சி வழியே உரையாற்றினார்.
அப்போது, இந்தியாவில் பழமையான ஜனநாயக கலாச்சாரம் உள்ளது. அது இந்திய நாகரிகத்தின் உயிர்நாடி. ஒருமித்த கருத்தை உருவாக்குதல், வெளிப்படை உரையாடல் மற்றும் சுதந்திரமான விவாதம் ஆகியவை இந்தியாவின் வரலாறு முழுவதும் எதிரொலித்துள்ளன. அதனால்தான் எனது சக குடிமக்கள் இந்தியாவை ஜனநாயகத்தின் தாய் என்று கருதுகிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்துப் பேசிய பிரதமர் மோடி, அடுத்த சில வாரங்களில், ஜனநாயகத்தின் பெரிய திருவிழாவை உலகம் காணவுள்ளது. ஜனநாயகத்தில் உள்ள நம்பிக்கையை மக்கள் மீண்டும் ஒரு முறை உறுதி செய்ய உள்ளனர்.
நூறு கோடி வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதகுல வரலாற்றில் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையாக இது இருக்கும். ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா உலகம் காணும் என்றும் மோடி குறிப்பிட்டார்.
உலகளவில் சவால்களை எதிர்கொள்ள ஜனநாயக நாடுகளின் கூட்டு முயற்சிகளுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். வரும் தலைமுறைகளுக்கு பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை நாங்கள் அமைப்போம்.
இந்த முயற்சியில் தனது அனுபவத்தை அனைத்து சக ஜனநாயக நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்று அவர் மேலும் கூறினார். இதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.