வரலாற்று தோல்வியை மறைப்பதற்காக அதிகாரிகள் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சுமத்துவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தலைமையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, தேர்தல் பத்திர விவகாரம் மற்றும் காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு பாஜகதான் காரணம் என குற்றம்சாட்டினார்.
இதற்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வாக்களார்கள் நிராகரிக்கப் போகின்றனர். அந்த கட்சி வரலாற்று தோல்வியை சந்திக்கப் போகிறது.
அதற்கு பயந்து காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி இந்திய ஜனநாயகம் மற்றும் விசாரணை அமைப்புகள் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தங்கள் சொந்த தவறுகளை சரிசெய்வதற்கு பதிலாக, காங்கிரஸ் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டுகிறது. நாட்டின் விதிகளுக்கு இணங்க வரி செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும், வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும், ஒவ்வொரு துறையிலும் கொள்ளையடித்த ஒரு கட்சி, ஜனநாயகம் மற்றும் நிதி பற்றி பேசுவது நகைச்சுவையாக உள்ளது. ஜீப்பில் தொடங்கி ஹெலிகாப்டர் ஊழல் வரை குவிக்கப்பட்ட பணத்தை, காங்கிரஸ் கட்சி தங்கள் தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த முடியும்.
காங்கிரஸின் பகுதி நேரத் தலைவர்கள் இந்தியாவில் ஜனநாயகம் என்பது பொய் என்று கூறுகிறார்கள் – 1975 முதல் 1977 வரையிலான சில மாதங்கள் மட்டுமே இந்தியா ஜனநாயகமாக இல்லை என்பதை நான் அவர்களுக்குத் தாழ்மையுடன் நினைவூட்டுகிறேன் என நட்டா தெரிவித்துள்ளார்.