அசாம் மாநிலம் துப்ரி அருகே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய தலைவர் மற்றும் அவருடைய நெருங்கிய கூட்டாளியை, அம்மாநில சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் சர்வதேச எல்லையைக் கடந்து அசாம் மாநிலத்திற்குள் ஊடுருவி இருப்பதாக அம்மாநில போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், துப்ரி மாவட்டத்தில், அசாம் சிறப்பு படைப் பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த இரண்டு தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து, கௌகாத்தியில் உள்ள STF அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்கள் மீது ஏற்கெனவே, தேசிய புலனாய்வு முகமை (NIA), தீவிரவாத எதிர்ப்பு படை (ATS) வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கைது செய்யப்பட்டவரில் ஒருவர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் ஹரிஸ் ஃபரூக்கி என்றும், இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொருவர், பானிப்பட் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும், இந்தியாவில் தீவிரவாத செயல்களை செய்யவும், அதற்கான நிதி திரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.