ராம நவமி கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா கடந்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. பாரதப் பிரதமர் மோடி பூஜைகள் செய்து குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்தார்.
மறுநாள் முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், ராம நவமி விழா ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை ராமர் பிரதிஷ்டை விழா நடைபெற்று இரு மாதங்கள் கழித்து பிரதமர் மோடி அயோத்தி செல்ல உள்ளார்.
மேலும், ராம நவமியை ஒட்டி நாடு முழுவதும் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமரின் பிறப்பைக் கொண்டாடும் குறிப்பிடத்தக்க இந்து பண்டிகையான ராம நவமி, தேர்தல் காலத்தின் மத்தியில் பிரதமரின் சாத்தியமான வருகையுடன் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
ஏப்ரல் 17 ஆம் தேதி நண்பகல் 12 மணியளவில் ‘சூரிய அபிஷேகத்தின்’ போது கருவறையில் (ஒடிசாவின் கோனார்க் கோவிலில் உள்ளதைப் போல) ராமர் சிலை மீது சூரிய ஒளி நேரடியாக விழுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, ரூர்க்கியில் உள்ள மத்திய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.