மேகதாது அணை கட்டும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டதாக கர்நாடாக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ளது. அதில், மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயிகளின் இன்னல்களை போக்க மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக உறுதியான சட்ட நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மேகதாது தொடர்பான திமுகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அது திமுகவின் திட்டம். அது அவர்களின் அரசியல் நிலைப்பாடு. மேகதாதுவை அமைப்பதற்காகவே நான் நீர்ப்பாசனத்துறை அமைச்சரானேன்.
மேகதாது அணை கட்டும் கர்நாடகா அரசின் முயற்சி தடுத்து நிறுத்தப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் இருக்கலாம். ஆனால் நாங்கள் ஏற்கனவே சட்டப்பூர்வமாக எங்கள் பணியை தொடங்கிவிட்டோம் என அவர் தெரிவித்தார்.
மேகதாது அணை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல. நாடு முடிவதிற்கும் பொதுவானது. எனினும் நீதிமன்ற உத்தரவுப்படி 177 டிஎம்சி தண்ணீர் தருவோம் என டி.கே.சிவக்குமார் கூறினார். திமுகவும்,காங்கிரசும் இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. ஆனால் வாக்காளர்களை ஏமாற்றும் விதமாக கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவோம் என்று கூறுகிறது. திமுக அரசோ மேகதாது அணை கட்டும் பணி தடுத்து நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது.