தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி மீண்டும் கேரளா வருகை தர உள்ளார்.
543 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
18-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மத்தியில் ஆளும் பாஜகவின் வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பாஜகவினர் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.
பாரதிய ஜனதா தற்போது தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக வேட்பாளர்களை தேர்வு செய்து தீவிர களப்பணியாற்றியும் வருகிறது.
பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடியும், தமிழகம் மற்றும் கேரளாவிற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ரோடு ஷோவிலும் பங்கேற்றார்.
இந்த நிலையில் அவர் மீண்டும் கேரளா வர இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து, பா.ஜனதா மாநில தலைவர் சுரேந்திரன் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் மோடி விரைவில் கேரளா வர இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் கட்சியின் தேசிய தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ் நாத்சிங் உள்ளிட்டோரும் பிரச்சாரத்திற்காக கேரளா வர உள்ளதால் பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.