நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மார்ச் 31ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19 தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து வேட்பு மனு தாக்கல் செய்வதில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும் பல வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருந்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை மார்ச் 31ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்குகிறார். அங்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு வாக்கு சேகரிக்கிறார். 80ஆம் ஆண்டுகளில் ராமானந்த் சாகரின் ராமாயணத்தில் ராமனாக நடித்த நடிகர் அருண் கோவிலை பாஜக மீரட்டில் களமிறக்கியுள்ளது.
2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் மீரட் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர அகர்வால் சமாஸ்வாதி பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் ஹாஜி யாகூப் குரேஷியை சுமார் 5,000 வாக்குககள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக 71 இடங்களை கைப்பற்றி அசத்தியது. இருப்பினும், 2019 இல், சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) இடையே ஒரு வலிமையான கூட்டணியை அக்கட்சி எதிர்கொண்டது. அந்த தேர்தலில் பாஜக 64 இடங்களில் வெற்றி பெற்றது.
பாஜகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது.