டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்ட கருத்துக்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரியான குளோரியா பெர்பெனாவை இந்திய வெளியுறவு அமைச்சகம் வரவழைத்து, கடுமையான கண்டனங்களுடன் கூடிய கடிதம் ஒன்றை ஒப்படைத்தது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் (MEA) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் நடக்கும் சில சட்ட நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துக்கு நாங்கள் கடும் ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.
மற்றவர்களின் இறையாண்மை மற்றும் உள் விவகாரங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். சக ஜனநாயக நாடுகளின் விஷயத்தில் இந்த பொறுப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
இந்தியாவின் சட்ட செயல்முறைகள் சுதந்திரமான நீதித்துறையை அடிப்படையாகக் கொண்டவை.அதன் மீது தங்கள் கருத்துக்களை தெரிவிப்பது தேவையற்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனியும் கருத்து தெரிவித்து இருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.