பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் சந்தித்து பேசினர். அப்போது, கல்வி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகள் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
டெல்லியில் பிரதமர் மோடியை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சந்தித்து பேசினர். அப்போது, தூத்துக்குடி முத்து, டார்ஜிலிங், நீலகிரியில் தயாரிக்கப்பட்ட டீத்தூள் , களிமண்ணால் உருவான மண்குதிரை உள்ளிட்டவற்றை பில்கேட்சுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். இருதலைவர்களும் பல்வேறு துறைகள் குறித்து உரையாடினர். டிஜிட்டல் உள்கட்டமைப்பில் (DPI) இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை கேட்ஸ் பாராட்டினார்.
தொலைதூரப் பகுதிகள் கூட நகர்ப்புற மையங்களைப் போன்ற மருத்துவ சேவைகளைப் பெறுவதை உறுதிசெய்து, தரமான சுகாதாரத்திற்கான அணுகலை ஜனநாயகப்படுத்துவதில் டிஜிட்டல் தளங்களின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை விவரித்த பிரதமர், காட்சி உள்ளடக்கம் மற்றும் கதைசொல்லல் மூலம் கற்றல் அனுபவங்களை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
நான் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க விரும்புகிறேன். ஆசிரியர்கள் பற்றாக்குறையை தொழில்நுட்பத்தால் நிரப்ப விரும்புகிறேன் என்றும் பிரதமர் கூறினார்.
விவசாயத்தை நவீனமயமாக்க விரும்புகிறேன். அதை அறிவியல் பூர்வமாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.அதன் ஒரு பகுதியாக ட்ரோன் தொழில்நுட்பம் விரிவாக செயல்படுத்தப்பட்டது. அது மிகவும் வெற்றிகரமாக உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
டிஜிட்டல் யுகத்தில் ஜனநாயகமயமாக்கலின் முக்கியத்துவத்தையும், சம வாய்ப்புகளையும் வலியுறுத்தி ஆப்பிரிக்க நாடுகளின் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவது குறித்தும் பிரதமர் மோடி விவரித்தார்.
அனைத்து கிராமங்களுக்கும் டிஜிட்டல் வசதிகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை கேட்ஸிடம் பிரதமர் விளக்கினார். பெண்களின் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் விருப்பங்களுடன் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சீரமைப்பதன் மூலம், இந்த கண்டுபிடிப்புகள் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அன்றாட வாழ்க்கையில் ஒருங்கிணைக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டார். குறிப்பாக புதிய தொழில்நுட்பங்களை பெண்கள் உடனடியாக எற்றுக்கொள்வதாகவும் மோடி தெரிவித்தார்.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நான்காவது தொழில்துறை புரட்சிக்கு மத்தியில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை செய்யும் என நம்புகிறேன்.
கோவிட் தொற்றின் போது தடுப்பூசி விநியோகம் மற்றும் சான்றிதழுக்காக இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிட் செயலி குறித்து பிரதமர் மோடி பில்கேட்ஸிடம் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.