மேகதாது அணை விவகாரத்தில் திமுக மௌனம் காப்பது ஏன் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியில்,பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்
கருப்பு எம் முருகானந்தத்தை ஆதரித்து பிரச்சாரக் கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாலை பங்கேற்றார் உரையாற்றினார்.
இத்தனை ஆண்டுகளாகத் தஞ்சாவூரில் நின்ற திமுக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் , மீண்டும் பாரதப் பிரதமர் மோடிதான் ஆட்சியமைப்பார் என்பது உறுதியாகத் தெரிந்ததும், தேர்தல் களத்திலிருந்து விலகிவிட்டார். களத்தில் இருக்கும் மக்கள் அறிமுகம் தெரிந்த ஒரே வேட்பாளர், அண்ணன் கருப்பு எம் முருகானந்தம் மட்டும்தான்.
முதலமைச்சர் ஸ்டாலின், தன்னை டெல்டாக்காரன் என்று கூறிக்கொள்வார். வயலில் சிவப்புக் கம்பளம் விரித்து நடப்பது, வரப்புகளில் கான்கிரீட் சாலைகள் அமைப்பது, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்குக் கையெழுத்து போட்டுவிட்டு, தெரியாமல் கையெழுத்து போட்டுவிட்டேன் என்று கூறுவது, இதெல்லாம்தான் டெல்டாக்காரன் செய்கின்ற வேலைகளா?
கடந்த ஆண்டு டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வருவது தெரிந்ததும்,
தமிழக பாஜக சார்பாக, உடனடியாக மத்திய அமைச்சரை நேரில் சந்தித்துக் கடிதம் வழங்கி, டெல்டா பகுதியில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்தவர் அண்ணன் கருப்பு எம் முருகானந்தம்.
காங்கிரஸ் ஆட்சியில் அமைக்க மறுத்த காவிரி மேலாண்மை வாரியத்தைக் கொண்டு வர, டெல்டா பகுதி முழுவதும் சைக்கிளில் பயணம் செய்து போராடி, நமது பாரதப் பிரதமர் மோடி அமைத்த காவிரி மேலாண்மை வாரியத்தைப் பெறுவதற்காக உழைத்த கருப்பு எம் முருகானந்தம் தான் உண்மையான டெல்டாக்காரன்.
கர்நாடக மாநிலத்தில், பாஜக ஆட்சிக் காலத்தில், காவிரியில் தண்ணீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தது. திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதைக் குறைத்தார்கள். இங்கிருந்த திமுகவும், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கேள்வி கேட்கவில்லை.
இதனால், விவசாயம் பாதிக்கப்பட்டு, கடந்த ஆண்டு, மத்திய உணவுக் கழகம் வெளியிட்ட ஆய்வின்படி, டெல்டா பகுதியில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் அளவில், 3 லட்சம் டன் குறைந்துவிட்டது.
மேலும், கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு, மேகதாது அணையைக் கட்டப் போகிறோம் என்று கூறியதற்கும், தங்கள் கூட்டணி நலனுக்காக திமுக எதுவுமே கூறாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. தமிழக பாஜகவின் எதிர்ப்பால், தமிழகத்தின் ஒப்புதல் இன்றி, மேகதாது அணை கட்ட அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு கர்நாடக அரசைக் கண்டித்துள்ளது.
தஞ்சாவூர் நலனைக் காக்க, காவிரியின் தண்ணீர் டெல்டா விவசாயிகளுக்குப் பலனளிக்க, தஞ்சாவூரின் குரல் பாராளுமன்றத்தில் எதிரொலிக்க, பாரதப் பிரதமர் மோடி 400 இடங்களுடன் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதியிலிருந்து கருப்பு முருகானந்தம் அவர்களை, தாமரை சின்னத்தில், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என அண்ணாமலை கேட்டுக் கொண்டார்.