கச்சத்தீவு விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொள்வதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1974ம் ஆண்டு இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது இந்திய மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் 1976ல் இருநாடுகளுக்கு இடையே கையெழுத்தான மற்றொரு ஒப்பந்தத்தில் மீனவர்களின் உரிமை மறுக்கப்பட்டது என தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளில், 6184 இந்திய மீனவர்கள் இலங்கையால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 1175 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஐந்தாண்டுகளில் கச்சத்தீவு பிரச்சினை மற்றும் தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. இதுதொடர்பாக அப்போதைய தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போதைய முதல்வருக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன். இது திடீரென்று தோன்றிய பிரச்சினை அல்ல. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் நடந்துள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த விவகாரம் பொதுமக்களின் பார்வையில் இருந்து நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ளது.தங்களுக்கு பொறுப்பு இல்லை என்கிற வகையில் திமுக, காங்கிரசும் பேசுகிறது. கச்சத்தீவு தொடர்பான உண்மைகளை நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். கச்சத்தீவு ஒப்பந்தத்தை யார் மறைத்தார்கள் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என ஜெய்சங்கர் தெரிவித்தார்.