கேரளா கொல்லத்தில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகள் சேதமடைந்தன. இதில் பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
ஆலப்புழா, திருவனந்தபுரம், கொல்லம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான கடல் சீற்றம் காரணமாக மாநிலத்தில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு மாவட்டங்களில் 500 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
சுமார் 100 குடும்பங்கள் இடம்பெயர்ந்தனர். கடலுக்குள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராதவிதமாக எழும்பிய அலைகள், கடலோர மக்களிடையே சுனாமி அச்சத்தை ஏற்படுத்துள்ளது. வழக்கமாக இம்மாவட்டத்தில் மே, ஜூன், ஜூலை மாதங்களில் பருவமழையால் கடல் சீற்றம் இருக்கும்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாக நேற்று மாலையில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர்களைத் தாண்டி கடல் நீர் ஊருக்குள் புகுந்தது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மீனவ மக்கள்வெளியேறினர்.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், சாலையிலேயே உணவு சமைக்க நேரிட்டது. அப்பகுதி மக்கள் முண்டக்கல் – இரவிபுரம் கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து அவதிப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வெடிக்குன்னு பகுதியில் கடந்த 4 மாதங்களாக கடல் அரிப்பு அதிகமாக உள்ளது. அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.
இங்கு மீனவர்கள் மற்றும் வீட்டு வேலை செய்யும் ஏழைகள் வசிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த ஏழை மக்கள் போராட்டம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கொல்லம் கடலோரப் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததில் சுமார் 5 வீடுகள் சேதமடைந்துள்ளன. முழுமையாகவோ, பகுதியாகவோ வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடுகளை சீரமைக்க அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத போல் கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று கடல் சீற்றம் ஏற்பட்டு, மீனவ கிராமங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.