குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தெற்கு டெல்லியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட விஜேந்தர் சிங் ஆம் பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக மூத்த தலைவர்கள் வினோத் தாவ்டே, ராம்வீர் சிங் பிதுரி மற்றும் ராஜீவ் பாபர் ஆகியோர் முன்னிலையில் அவர் தம்மை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
ஹரியானாவில் கணிசமான அரசியல் செல்வாக்கு பெற்ற ஜாட் சமூகத்தை சேர்ந்தவர் விஜேந்தர் சிங். பாஜக எம்.பி.யும் நடிகையுமான ஹேமமாலினி மீண்டும் போட்டியிடும் மதுராவில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அவர் களம் இறக்கப்படலாம் என செய்திகள் வெளியான நிலையில் அவர் பாஜகவில் இணைந்துள்ளார்.
2008 பெய்ஜிங் விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் பதக்கம் வென்ற நாட்டின் முதல் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை இந்திய விளையாட்டு வரலாற்றில் சிங் பதிவு செய்தார்.
2009 உலக சாம்பியன்ஷிப்பில் இருந்து ஒரு வெண்கலப் பதக்கத்தையும், 2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இருந்து ஒரு தங்கப்பதக்கத்தையும் அவர் பெற்றார்.
இந்திய விளையாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில், 2010 ஆம் ஆண்டில் சிங்கிற்கு மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் அவர் மீது ஊக்கமருந்து குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.