கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் காந்திக்கு எதிராக போட்டியிடும் பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ம் தேதி தொடங்கியது.
இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிடும் கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். காங்கிரஸ் சார்பில் வயநாடு தொகுதி தற்போதைய எம்பி ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜா களம் இறங்கியுள்ளார்.
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள கே சுரேந்திரன் (வயது 54) காசர் கோடு பகுதியை சேர்ந்தவர். கல்லூரி படிக்கும் காலத்திலேயே ஆர்.எஸ் எஸ் அமைப்பின் மாணவ அமைப்பான ஏபிவிபியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.
பின்னர் பாஜகவில் இணைந்த சுரேந்திரன் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி கேரள அரசியலில் கவனம் பெற தொடங்கினார். இதன் மூலம் படிப்படியாக கட்சியிலும் இவருக்கு பொறுப்புகள் கிடைத்தன. கடந்த 2020 ஆம் ஆண்டு கேரள மாநில பாஜக தலைவராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டார்.