கூட்டுறவு வங்கிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இரு அரசியல் கட்சிகள் ரூ.380 கோடி டெபாசிட் செய்திருப்பது குறித்து வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
தென் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு அரசியல் கட்சிகள் கூட்டுறவு வங்கிகளில் கணக்கில் காட்டப்படாத ரூ. 380 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருவதாகவும், விரைவில் நோட்டீஸ் அனுப்ப வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இரண்டு மாநில அரசியல் கட்சிகளால் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள வைப்புத்தொகைகளில் சில முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இவை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் முன்னணியில் உள்ள இந்த இரு கட்சிகளும் முந்தைய ஆண்டுகளில் செய்த டெபாசிட் குறித்தும் வருமான வரித்துறை ஆய்வு செய்து வருகிறது.
தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சி இரண்டு உறுப்பினர்களின் கணக்குகளை பயன்படுத்தி பணத்தை டெபாசிட் செய்துள்ளது. அவர்களிடம் கடந்த மாதம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் கணக்கில் காட்டப்படாத டெபாசிட்களுக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என அந்த அதிகாரி கூறினார்.
கட்சியின் மற்ற உறுப்பினர்களுடன் இணைக்கப்பட்ட பிற கணக்குகளில் உள்ள பெரிய டெபாசிட்டுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
மற்றொரு கட்சி, அலுவலகத்திற்கு நிலம் வாங்குவதற்கும், கட்சி நிதி வசூலிப்பதற்கும் கட்சியின் பெயரில் கூட்டுறவு சங்கத்தில் உள்ள ஐந்து கணக்குகளை அமலாக்க இயக்குநரகம் ஏற்கனவே விசாரித்து வருகிறது. தேர்தலைக் கருத்தில் கொண்டு கருப்புப் பணம் பயன்படுத்துவதைத் வருமான வரித்துறை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலின் போது இதுபோன்ற பண பரிவர்த்தனைகள் குறித்து புகாரளிக்கத் தவறிய 12 கூட்டுறவு வங்கிகளை வருமான வரித்துறை அடையாளம் கண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.