நாட்டின் புகழுக்கு காங்கிரஸ் கட்சி களங்கம் ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் ஜமுய் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, கடந்த 10 ஆண்டுகால ஆட்சி ஒரு டிரெய்லர் மட்டுமே. எண்ணற்ற பணிகள் செய்ய வேண்டியுள்ளது. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நாட்டின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தியதாக காங்கிரஸ் கட்சியை அவர் சாடினார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்துள்ள ஆம் ஆத்மி கட்சியையும் பிரதமர் மறைமுகமாக விமர்சித்தார்.
ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுக்களைச் சுமத்தினர். ஆனால் தேர்தலுக்காக தற்போது ஒன்றுகூடி உள்ளதாக அவர் கூறினார்.
ரயில்வேயில் ஏழைகளுக்கு வேலை தருகிறோம் என்ற பெயரில் நிலத்தை அபகரித்தவர்களால் பீகார் மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது என்றும் மோடி தெரிவித்தார். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது உலகத்தின் பார்வையில் இந்தியா பலவீனமாக கருதப்பட்டது. ஆனால் தற்போது உலகளவில் நாட்டின் இமேஸ் உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
காங்கிரஸும் ஆர்ஜேடியும் தங்கள் ஆட்சியின் போது நாட்டின் நற்பெயரை கெடுத்துவிட்டன. பிஜேபியும் என்டிஏவும் ஒரே இலக்கை நோக்கி செயல்படுகின்றன. அதாவது ‘விக்சித் பாரத்’ (வளர்ந்த இந்தியா) மற்றும் வளமான பீகாரைக் கட்டமைக்க வேண்டும்.
இன்று நாம் உலகிற்கு வழி காட்டுகிறோம்.உலகமே நம்மை பார்த்துக்கொண்டிருக்கிறது. இன்று நாம் ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக இருக்கிறோம் என்று அவர் கூறினார்.
500 ஆண்டுகால ராமர் கோவில் கனவு நிறைவேறியது பாஜக ஆட்சியல் தான் என்றும், காங்கிரஸும், ஆர்ஜேடியும் தங்களின் முழு பலத்தை பயன்படுத்தி ராமர் கோவில் நிஜமாகாமல் தடுக்க முயற்சித்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
பீகாரில் 40 தொகுதிகளிலும், நாடு முழுவதும் 400-க்கும் அதிகமான இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என்பதை தெளிவாக உணர முடிவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.