யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களின் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வசந்த காலத்தின் தொடக்க விழாவாகவும் யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்த பண்டிகை, ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாட்காட்டியின்படி மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்து சூரியசந்திர நாட்காட்டியின்படி, யுகாதி சித்திரை மாதத்தின் முதல் நாளாக கருதப்படுகிறது.
நாடு முழுவதும் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் மிக கோலாகலமாக கொண்டாடுகின்றனர். யுகாதி பண்டிகையை முன்னிட்டு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “உலகம் முழுவதும் உள்ள தெலுங்கு மற்றும் கன்னட சகோதர சகோதரிகளுக்கு, தமிழக பாஜக சார்பாக, இனிய யுகாதி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
யுகாதி பண்டிகை, பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும், கலைக்கும், நம் மண்ணுக்கும் தொடர்ந்து பெருமை சேர்த்து வரும் நம் தெலுங்கு, கன்னட மொழி பேசும் சகோதரர்களின் புத்தாண்டாக, வசந்த காலத்தின் தொடக்க நாளாக, விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த இனிய யுகாதி தினத்தில், அனைவர் வாழ்விலும், புகழும் செல்வமும் பெருகவும், மகிழ்ச்சி நிறையவும் புத்தாண்டில், இறைவன் அருளினால் அனைத்தும் நிறைந்திருக்க வேண்டிக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.