இந்தியா வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேலூர் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.
அப்போது, எனது அன்பார்ந்த சகோர சகோதரிகளை என தனது உரையை தமிழில் பிரதமர் மோடி தொடங்கினார். தமிழில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். 2024 தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும். ஜலகண்டேஸ்வரர், முருகப்பெருமானை வணங்கி உரையை தொடங்குகிறேன்.
ஆங்கியேர்களுக்கு எதிராக மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டது வேலூர். அந்த நகர மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க தயாராகிவிட்டனர். வேலூர் மண் மீண்டும் ஒரு புரட்சி படைக்கப்போகிறது. இந்த கூட்டத்தை டெல்லி ஆச்சரியமுடன் பார்க்கிறது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாடு என்ன நிலையில் இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். காங்கிரசின் கடந்த கால ஆட்சியில் மோசடி,ஊழல் என்று தான் செய்தி வரும் .
வளமான இந்தியாவுக்கு பாஜக அடித்தளமிட்டுள்ளது. விண்வெளி துறையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழகத்தின் திறமை வளர்ந்து வரும் இந்தியாவுக்கு வலு சேர்க்கும். இந்தியா வல்லரசாக மாறி வருகிறது என தெரிவித்தார்.